பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்வு - செல்வப்பெருந்தகை கண்டனம்

பதிவு அஞ்சல் சேவையை நிறுத்துவது மக்கள் மீது நேரடி தாக்குதலை ஏற்படுத்துகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்வு - செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

இந்தியாவின் அஞ்சல் துறை பல கோடி மக்களுக்கு சேவை செய்யும் துறையாகும். கடந்த நிதியாண்டில் சுமார் 2,300 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் மேலும், லாபம் ஈட்டும் நோக்கத்தோடு சமீபத்தில், மத்திய பா.ஜ.க. அரசு இந்திய அஞ்சல் துறை பதிவு அஞ்சல் (Registered Post) சேவையை நிறுத்தி, மக்கள் துரித அஞ்சல் (Speed Post) சேவையை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இதன் மூலம், வறுமை நிலையில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்விதுறை நிர்வாகம், நிதித்துறை, வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோர்கள் கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை அனுப்புவதற்கு இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை மத்திய பா.ஜ.க. அரசு பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது.

பதிவு அஞ்சல் மற்றும் துரித அஞ்சல் இரண்டிற்கும் விநியோகம் செய்வதில் உள்ள நேரம் வேறுபாடு பெரிதாக இல்லாதபோதிலும், கட்டணங்களில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. பதிவு அஞ்சல் கட்டணம் சுமார் ரூபாய் 45 மட்டுமே இருந்த நிலையில், துரித அஞ்சலுக்கு ரூபாய் 85 வரை வசூலிக்கப்படுகிறது. ஒப்புதல் அட்டை கட்டணமும் ரூபாய் 3 இருந்து ரூபாய் 11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அஞ்சல் துறையின் இந்த முடிவு சமூகநீதிக்கும், கல்வியறிவு வளர்ச்சிக்கும் எதிரானது. இந்திய மக்களின் அடிப்படை தொடர்பு சேவையான பதிவு அஞ்சல் சேவையை நிறுத்துவது மக்கள் மீது நேரடி தாக்குதலை ஏற்படுத்துகிறது.

எனவே, மத்திய அரசும், அஞ்சல் துறையும் இந்த அநீதி முடிவை உடனடியாக ரத்து செய்து, பதிவு அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்கவும், துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இது வெறும் கட்டண உயர்வு அல்ல, இது இந்தியாவின் ஏழை மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுரண்டல். இந்த அநீதிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com