கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கிய செங்கோட்டையன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் வாழ்த்து பதிவிட்டு இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கோபிசெட்டிபாளையம்,
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் கடந்த வாரம் இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளை விஜய் வழங்கினார்..அதைத்தொடர்ந்து கோபி அருகே கரட்டூரில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல் அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டது. இது அதிமுகவினர் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், தனது முகநூல், எக்ஸ் பக்கத்தில் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார் செங்கோட்டையன். அதில், அண்ணா, காமராஜர், வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, படங்களுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ப்டங்களும் இடம் பெற்று இருந்தது.
செங்கோட்டையனுக்கு விஜய் சால்வை அணிவிப்பது போன்ற படமும் இருந்தது. தவெகவில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் வெளியிட்ட இந்த சமூக வலைத்தள பதிவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கார்த்திகை தீபத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு இருந்த பதிவை ஒரே நாளில் செங்கோட்டையன் நீக்கியுள்ளார்.






