எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த செங்கோட்டையன்: தளவாய் சுந்தரம் காட்டமான பதில்

எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு கொடுப்பதற்கெல்லாம் செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது என்று தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். அதாவது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார்.
செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, அவரது கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி கொடுத்தார். செங்கோட்டையன் மீதான கட்சி பதவி பறிப்பு நடவடிக்கையை ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இந்த நிலையில், வரும் 9-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் மூத்த நிர்வாகியாக உள்ள செங்கோட்டையன் மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் செங்கோட்டையனை விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தளவாய் சுந்தரம் கூறியதாவது: “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு கொடுப்பதற்கெல்லாம் செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு உதவுவதை விட்டுவிட்டு தொந்தரவு கொடுத்தால், அதைத் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? செங்கோட்டையன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது” என்றார்.






