தூத்துக்குடியில் சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.7 லட்சம் வழங்க உத்தரவு


தூத்துக்குடியில் சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.7 லட்சம் வழங்க உத்தரவு
x

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள நபர் ஒருவர் திருநெல்வேலியிலுள்ள மோட்டார் நிறுவனத்திடம் ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள ஜெபிஸ்டன் என்பவர் திருநெல்வேலியிலுள்ள மோட்டார் நிறுவனத்திடம் ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதன் பேரில் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒரு பாலிசி எடுத்துள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடியிலிருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பைபாஸ் சாலையில் வைத்து திடீரென வாகனத்தின் முன் வலது பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி முழுவதுமாக சேதமடைந்தது.

இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடமும் மனு அளித்துள்ளார். மேற்சொன்ன வாகனத்தை சரி செய்வதற்காக மோட்டார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதன் பின்னர் காப்பீட்டு நிறுவனம் தனது சர்வேயர் மூலம் தணிக்கை செய்து இழப்பீடு தருவதாக கூறியுள்ளனர். ஆனால் வாகனத்தில் அதிக எடை ஏற்றியதாகவும், அதன் காரணமாகவே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கூறி மனுவை நிராகரித்து உள்ளனர்.

இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத பதிலால் வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானதால் நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேதமடைந்த வாகனத்திற்கு ரூ.4,01,463.37, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.3,00,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 463.37-ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.

1 More update

Next Story