7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கோப்புப்படம்
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியை யாரோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதாக கூறினர்.
இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தார். அப்போது கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் சித்தா கிளினிக் நடத்தி வரும் பாலசுப்பிரமணி (60 வயது) என்ற சித்த மருத்துவர் சிறுமியை கிளினிக்கிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறினார்.
இதுபற்றி சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எஸ்.பத்மா முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சித்த மருத்துவர் பாலசுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.