#SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா.? - சரிபார்ப்பது எப்படி.?


#SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா.? - சரிபார்ப்பது எப்படி.?
x

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும்.

சென்னை,

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதற்காக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி என்ற விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம்:

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி.?

1. voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2. உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.

3. பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.

4. இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம் .

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்.?

* இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

* இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story