சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தல்: விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் டிரோன்கள் பறிமுதல்

சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர்.
கோவை,
சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் ரிமோட் கன்ட்ரோலுடன் இயங்கும் டிரோன்கள் மற்றும் அதனை இயக்குவதற்கு தேவையான பேட்டரி போன்ற சாதனங்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கடலூரை சேர்ந்த பிரபாகரன், திருவாரூரை சேர்ந்த அவினாஷ், விழுப்புரத்தை சேர்ந்த பரந்தாமன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது சுங்க சட்டம் 1962-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






