நான் படித்த முட்டாள்... உருக்கமான ஆடியோ... குழந்தைகளுடன் தந்தை எடுத்த கோர முடிவு

கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டம், பண்ருட்டி காமராஜ்நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் விவசாயி ராஜா(வயது 40). எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். குமரகுரு(12) என்ற மகன், தன்யாஶ்ரீ (7) என்ற மகள் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று ராஜா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். பிற்பகல் 2 மணியளவில் ராஜா தனது மனைவி சுகன்யா மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமான ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் அவர் நான் படித்த முட்டாள். நான் உங்களிடம் இருந்து பிரிகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், பைத்தியக்காரத்தனமான ஒரு முடிவை எடுக்கிறேன். நான் யாருக்கும் கஷ்டத்தையும், பாரத்தையும் கொடுக்க விரும்பவில்லை, நான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவரை தொடர்ந்து 2 குழந்தைகளும், நீங்களும் எங்களை மன்னிச்சுக்குங்க, நாங்களும் எங்க அப்பாவோட சாமிகிட்ட செல்கிறோம் என்று கூறி இருந்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு உடனடியாக ராஜாவின் வீ்ட்டுக்கு ஓடிச்சென்று பார்த்தனர். மனைவி சுகன்யாவும் அங்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் ஒரே சேலையில் அவரது 2 குழந்தைகளும், சுடிதார் துப்பாட்டாவில் ராஜாவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதனர்.
கணவர் மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து சுகன்யாவும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ராஜா தனது 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






