முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Oct 2025 8:26 AM IST (Updated: 28 Oct 2025 2:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அம்பாளிடம் வேல் பெற்ற முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக புறப்பாடு நடந்தது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோவில்:

கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி சென்னை வடபழனி முருகன் கோவிலில் நேற்று இரவு 7 மணி அளவில் அம்பாளிடம் வேல் பெற்ற முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக புறப்பாடு நடந்தது.

தெற்கு கோபுர சன்னதி வீதியில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட உருவங்களில் வந்த தாரகாசுரன், சிங்கமுகாசுரன், அஜமுகி ஆகியோரை வதம் செய்த முருகப்பெருமான் இறுதியாக சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பிறகு, மாமரமாக உருமாறிய சூரபத்மனை முருகப்பெருமான் ஆட்கொண்டார். இதை விளக்கும் வகையில் மாமரத்தை பிளந்தபோது சேவல், மயிலாக மாறும் காட்சி நடந்தது. அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அரோகரா அரோகரா' என கோஷம் எழுப்பியபடி, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் எல்.ஆதிமூலம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கந்தகோட்டம் கந்தசாமி கோவில்:

பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்தையொட்டி மாலை 5.30 மணிக்கு சாமி புறப்பாடும், இரவு 7 மணியளவில் சூரனை முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு சாமி புறப்பாடும், இரவு 7 மணி அளவில் வடக்கு மாடவீதியில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது.

சிறுவாபுரி-குன்றத்தூர்:

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், திருப்போரூர், வல்லக்கோட்டை ஆகிய பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடக்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் பக்தர்களோடு, பக்தர்களாக நின்று முருக பெருமானை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story