திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப் பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காலை, 5.10 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.30 மணியளவில் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளிக்கிழமை மண்டபத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






