சென்னையில் 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம்

ரிப்பன் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம் நடைபெற்றது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 தொடர்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகள் தொடர்பாக வாக்காளர் உதவி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் சேர்கை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சிறப்பு தீவிரத் திருத்த முகாம் 5 இடங்களில் இன்று (22.01.2026) நடைபெற்றது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகம், திருவொற்றியூர் மண்டலம், வார்டு10-க்குட்பட்ட மேற்கு மாதா தெரு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வி.ஆர்.பிள்ளை தெரு சமுதாயக் கூடம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கண்ணகி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி, திருவான்மியூரில் மாநகராட்சி பகுதி அலுவலகம் என 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம் நடைபெற்றது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






