’சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்’ - கமல்ஹாசன் நிலைப்பாடு என்ன.?

2026 தேர்தலுக்குப் பிறகு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
எஸ்.ஐ.ஆர். நிலைப்பாடு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”மக்களாட்சியின் அடித்தளமே வாக்குரிமைதான். 18 வயது பூர்த்தியான, அனைத்து இந்தியக் குடிமக்களையுமே வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். எனவே, தகுதியுள்ள ஒருவரின் பெயர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (Special Intensive Revision) ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது? இந்த அவசரத்தினால்தான், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்வதன் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? ஏன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணியை மேற்கொள்ளக் கூடாது?
இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்குத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளிடுவதில் ஏன் தயக்கம்?
தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. நடுநிலையுடன் செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, அவசரகோலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளாமல், நிதானமாகவும், முழுமையாகவும் இப்பணியை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்குப் பருவ மழைக்காலம் நிலவுகிறது. இந்த நேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வது, பல்வேறு நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தும். இந்தப் பணியை முறையாக, முழுமையாக, நடுநிலையுடன் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
அலுவலர்கள் சென்றபோது வீட்டில் ஆள் இல்லை என்று கூறியோ, அபத்தமான காரணங்களைத் தெரிவித்தோ தகுதியுடைய ஒருவரின் பெயரைக்கூட பட்டியில் இருந்து நீக்கிவிடக்கூடாது. சிறப்பு தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைத் தீர்க்க வேண்டுமே தவிர, மேலும் புதிய பிரச்சினைகளைக் கொண்டுவந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அவசரம் அவசரமாக இப்பணியை மேற்கொள்ளாமல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை செயல்படுத்தலாம்.
மேலும், இது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல் கிடைத்த பிறகு இப்பணியை முன்னெடுப்பதுதான் சரியாக இருக்கும்.
தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. நடுநிலையுடன் செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, அவசரகோலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளாமல், நிதானமாகவும், முழுமையாகவும் இப்பணியை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






