முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - வானதி சீனிவாசன்


முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - வானதி சீனிவாசன்
x

கோப்புப்படம்

முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட கூட்டம் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை" என வழக்கமான அவதூறை மீண்டும் பரப்பியிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை செயல்படுத்துவது மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள்தான். அதனால்தான், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும், மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகின்றன. தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு இருந்தபோதும் இதுதான் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்திய நிதி ஆணைய பரிந்துரைப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பகிர்ந்தளித்து வருகிறது. அதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், எந்த அளவுகோலின்படி, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டதோ, அதன்படிதான் இப்போதும் நிதி வழங்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசுக்கு எதிராக, இந்திய தேசியத்திற்கு எதிரான எண்ணத்தை தமிழ்நாட்டு மக்களிடம் விதைக்கும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு, மத்திய அரசை, முதல்-அமைச்சர் ஸ்டாலின் எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கிறார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அறிவிக்கப்பட்டது முதலே, முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், தூக்கத்தில்கூட அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியைப் பற்றி புலம்பி தீர்த்தனர்.

இந்நிலையில் ஜூன் 22-ம் தேதி மதுரையில் 5 லட்சத்திற்கும் அதிகமான முருக பக்தர்கள் திரண்ட மாபெரும் முருக பக்தர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்பதை, அவரது திருப்பத்தூர் அரசு விழா பேச்சில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்வதாக பா.ஜ.க. மீது அரசு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக, மத அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கிற தி.மு.க.வுக்கு, மதத்தைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்த அறுவடை செய்வதற்காக, இந்து மதத்தை, இந்து கடவுள்களை மட்டுமே கேலி, கிண்டல் பேசும் தி.மு.க. மதவாதம் பற்றி பேசலாமா? வக்பு சட்டத் திருத்தத்தின்போது மதத்தின் பக்கம் நிற்கும் தி.மு.க. இந்து மதம், இந்து கடவுள் என்று வரும்போது மட்டும் மதச்சார்பின்மை பேசுகிறது. இப்படிப்பட்ட வேடதாரிகள் பா.ஜ.க.வுக்கு மதச்சார்பின்மை பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்நாடு பெரியார் மண் என்கிறீர்கள். ஆனால், தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் பெரியார் மண் இல்லையா? அங்கு அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலை இருக்கிறது. ஆனால், பெரியார் சிலை இல்லை. அந்த ரகசியத்தை தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்வாரா முதல்-அமைச்சர் ஸ்டாலின். தி.மு.க. ஆட்சியில் இந்து கோவில்கள், இந்துக்களிடம் இல்லை. கோவில் திருவிழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்திலும், நாத்திக, இந்து மதத்தின் வெறுப்பு கொண்ட தி.மு.க.வினர் தலையிடுகிறார்கள். இதைக் கேட்டால் மதவாதமா?

சனாதன தர்மமான இந்து மதத்தை, கொசு போல ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு, தமிழ்நாட்டில் இந்து மதத்திற்கு ஆபத்து இல்லை என்கிறார். இதைவிட வெறுப்பு அரசியல் இருக்க முடியுமா?

இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு நடப்பது அரசின் பணத்தில் அல்ல. இந்துக்களின் பணத்தில். கோயில் வருவாயை சுரண்டும் கூட்டம், இந்துக்களிடம் நன்கொடை வசூலித்தே குடமுழுக்கு நடத்துகிறது. இதை மறைக்க இன்னும் எத்தனை நாடகமாடுவீர்கள்?

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது என்றால், முருக பக்தர்கள் மாநாட்டால் பா.ஜ.க.வுக்கு பலனில்லை என்றால் முதல்-அமைச்சர் ஸ்டாலினும், தி.மு.க.வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும். ஆனால், தினமும் அதைப்பற்றி பேசிபேசி மாய்கிறார்கள். புலம்பி தீர்க்கிறார்கள்.

முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட கூட்டமும், அவர்கள் நடந்து கொண்டு கண்ணியமும், அவர்களின் பக்தியும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் கலக்கத்தை, நடுக்கத்தை, தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத முதல்-அமைச்சர் ஸ்டாலின், நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல என பேசத் துவங்கியிருக்கிறார். முருக பக்தர்கள் மாநாட்டு வெற்றியால் பதைபதைத்துப் போன, இந்து விரோதிகள், எதையாவது செய்து அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். அது ஒருநாளும் நடக்கப்போவதில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story