மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு


மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும் - முத்தரசன் வரவேற்பு
x

கோப்புப்படம் 

மாநிலக் கல்விக் கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கையை நேற்று முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மொழிக் கொள்கை குறித்து விரிவாக ஆய்வு செய்து இரு மொழிக் கொள்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என பணித்துள்ளது.

மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நீக்கப்பட்டிருப்பது வளர்ந்து வரும் குழந்தைகள் அச்சம் இல்லாமல், கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். அதே சமயம், தனியார் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் கற்பித்தலை கைவிட்டு, பிளஸ் 2 வகுப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, பழைய நடைமுறையை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சமச்சீர் கல்விக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தகைசால் பள்ளிகள் என்ற முறை பாகுபாடு ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது.

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கையெழுத்துப் போட்டால்தான் மாநில அரசுக்கான கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு நிர்பந்தித்து வரும்போது, கல்வி தொடர்பான அதிகாரங்கள் முழுமையும் மாநில அரசுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே சரியாகும். இந்தக் கோரிக்கையை மக்கள் இயக்கமாக கட்டமைக்க வேண்டும். அதேசமயம், நீட், ஜேஇஇ போன்ற நடைமுறையில் இருந்து வரும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதில் முன்னணி வகித்து வரும் மாணவர் திறனும் குறைந்து விடாமல் இருப்பது அவசியமாகும்.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு தக்கபடி, திறனை வளர்த்து தகவமைத்துக் கொள்ளும் படைப்பாற்றல், சிந்தனை, நிதியியல் சார் கல்வி, எண்ம நுட்பங்கள், சுற்றுச்சூழல், உலகளாவிய குடியுரிமை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கி, உருவாக்கப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினர் எதிர்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிர்கொள்ளும் திறனையும், தன்னம்பிக்கையினையும் ஊக்கப்படுத்தும் திசை வழியில் அமைந்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story