திருவாரூரில் பச்சிளம் குழந்தையை கவ்விச்சென்ற தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பச்சிளம் ஆண் குழந்தை உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பச்சிளம் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பச்சிளம் குழந்தையை வீட்டில் தூங்கவைத்துவிட்டு வீட்டுவேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த தெருநாய் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச்சென்றது.
இதை கவனித்த குழந்தையின் பாட்டி, தெருநாயை விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது, குழந்தையின் பாட்டியையும் தெருநாய் கடித்துள்ளது. நாய் கடித்ததில் பச்சிளம் குழந்தைக்கும், பாட்டிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சென்ற இளம்பெண், தெருநாயை விரட்டியுள்ளார். பின்னர், காயமடைந்த குழந்தை, பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டக்களில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






