பலத்த சூறாவளி காற்று: தனுஷ்கோடியில் சாலையை மூடிய மணல்


பலத்த சூறாவளி காற்று: தனுஷ்கோடியில் சாலையை மூடிய மணல்
x

சாலையை மூடிய மணலை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது. இயற்கையாகவே தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றமாக இருப்பதும், பலத்த சூறாவளி காற்று வீசுவதையும் அவ்வப்போது காண இயலும். இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை வரை உள்ள இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை பல இடங்களில் மணல் மூடியுள்ளது.

தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் முதல் கம்பிப்பாடு அரிச்சல்முனை இடைப்பட்ட சாலையில் பல இடங்களில் பல வாரங்களாக மணல் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தனுஷ்கோடிக்கு பல ஊர்களில் இருந்து நாள்தோறும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் மணலில் சிக்கி அவதியடைகின்றனர். இந்த மணலை அகற்ற சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே சாலையை மூடிய மணலை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story