போலியான சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் - மாணவி, பெற்றோர் கைது

கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் போலியான சான்றிதழ் கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி நீட் மதிப்பெண் சான்று, மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு சான்று ஆகியவற்றை போலியாக உருவாக்கி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்புக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினி (19), அவருக்கு உதவியாக இருந்த அவரது பெற்றோர் சொக்கநாதன்(55) மற்றும் விஜயமுருகேஸ்வரி(47) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






