காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 53 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் ஓராண்டுக்குமேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேல் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற அத்துமீறிய செயல் போரை விரிவடையச்செய்யும் செயல். அதனுடன் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி பாலஸ்தீனிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இஸ்ரேலின் இந்த வன்முறைப்பாதை நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதற்கு கட்டுப்பாடு, நீதி மற்றும் அர்த்தமுள்ள ராஜதந்திரம் மூலம் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இனி போர் வேண்டாம்' என தெரிவித்துள்ளார்..






