பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா- நாளை போக்குவரத்து மாற்றம்

வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான்
சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு பொள்ளாச்சியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் பழமையான பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 22-ந்தேதி காலை 10 மணிக்கு கந்தசஷ்டி உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக் கொண்டனர்.
இன்று சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு, எஸ்.எஸ். கோவில் வீதி வழியாக சென்று சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதலில் கஜமுகாசுரனை வதம் செய்கிறார். பின்னர், தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகாசுரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் சூரபத்மனையும் வதம் செய்கிறார்.
சூரசம்ஹார நிகழ்வில் ஏராளாமன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். எனவே, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹார விழாவையொட்டி பொள்ளாச்சி சத்திரம் வீதி, வெங்கட்ரமணன் வீதி, தெப்பக்குளம் வீதியில் நாளை மாலை 4 மணிக்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.






