கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ரூ.3 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ரூ.3 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ரூ.3 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள்
Published on

கோவை,

கோவை-அவினாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,790 கோடியில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேம்பாலம் திறக்கப்பட்டதும் சில நாட்களில் அதிவேகமாக சென்ற ஒரு கார், கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்குதளத்தில் இருந்து சாலையில் செல்லும்போது லாரி மீது மோதி 3 பேர் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள், வேக தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மேம்பாலத்தில் வேக தடுப்புகள், வழிகாட்டி தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மேம்பாலத்தில் இரவிலும் பதிவு செய்யக்கூடிய ஏ.ஐ. தெழில்நுட்ப வசதியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறியதாவது:-

மேம்பாலத்தில் பல்வேறு இடங்களில் 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கேமரா, அதிவேகமாக செல்லும் வாகனங்களை இரவிலும் பதிவு செய்யும். புகைப்படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் இந்த கேமராக்கள் செயல்படும்.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் அபராதம் விதிக்கப்பட்ட விவரங்கள் இடம்பெறும் டிஜிட்டல் டி.வி. திரைகளும் 17 இடங்களில் வைக்கப்படும். அனைத்து பணிகளும் ரூ.3 கோடி செலவில் செய்யப்படும். இதற்கான ஒப்பந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். இதன் மூலம் மேம்பாலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com