2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் - அறிக்கை வெளியீடு


2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி  குற்றப்பிரிவின் சாதனைகள் - அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 31 Dec 2025 4:48 PM IST (Updated: 31 Dec 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் குறித்து சென்னையில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இணையம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சியுடன், ஆன்லைன் நிதி மோசடி, முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், ஆள்மாறாட்டம் மோசடிகள் போன்ற குற்றங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. வேகமாக வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை திறம்பட எதிர்கொள்ள, இணையவழி குற்றப்பிரிவு ஒரு பன்முகதன்மை கொண்ட யுக்தியை பயன்படுத்துகிறது.

இது செயலூக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் இரண்டையும் உள்ளடக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள், சைபர் ரோந்து மற்றும் புலனாய்வு குழு மூலம் முன்கூட்டியே மற்றும் நிகழ்நேர அச்சுறுத்தலைக் கண்டறிவதன் மூலம் தடுப்பு கண்காணிப்பு, குற்ற சரித்திரப்பதிவேடு திறத்தல் போன்றவை அடங்கும்.

பின்வினை நடவடிக்கைகளில் உடனடி விசாரணை, கைதுகள், குண்டர் சட்டத்தின் கீழ் காவல் போன்றவை அடங்கும். இணையவழி குற்றப்பிரிவின் உயிர் நாடி உதவி எண் 1930 ஆகும். 1930 கட்டுப்பாட்டு அறை விரிவாக்கத்திற்கு முதல்-அமைச்சரால் ரூ.9.28 கோடி வழங்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு பகுதி நேரத்திலும் 8 இருக்கைகளில் இருந்து 15 இருக்கைகளாக வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டது, மூன்று "மாறுபட்ட இருக்கை நேரம்" வேலை செய்வது மூலம் கால் டிராப் (call drop rate) விகிதத்தை 20.43% -ல் இருந்து 5% ஆகக் குறைத்துள்ளது.

இணையவழி குற்றப்பிரிவின் தீவிர முயற்சியால், 36 வங்கிகள் API அடிப்படையிலான பண முடக்க முறைகளை செயல்படுத்தியுள்ளன. இது சந்தேக நபர்களின் கணக்குகளில் உள்ள மோசடி நிதிகளை சில நிமிடங்களில் விரைவாக முடக்க உதவுகிறது. அனைத்து வங்கிகளையும் API அடிப்படையிலான பணமுடக்க முறையின் கீழ் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

இணையவழி குற்றப் பிரிவு தலைமையகம் மற்றும் இணையவழி குற்ற காவல் நிலையங்களுக்கு தேவையான சைபர் தடயவியல் கருவிகள் விசாரணைக்கு உதவும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றப் பிரிவு தலைமையகத்தில் அதிநவீன சைபர் தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது, இது சைபர் குற்ற வழக்குகளை விசாரிக்க தேவையான சைபர் தடயவியல் கருவிகளைக்கொண்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நகரம்/மாவட்டத்தில் செயல்படும் சைபர் குற்ற காவல் நிலையங்களுக்கு விசாரணையை நடத்த அடிப்படை சைபர் தடயவியல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சமூக ஊடகதளங்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இணைய வெளியில் சட்டவிரோத, மோசடி நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்காணிக்கவும் எதிர்கொள்ளவும் இணையவழி குற்றப் பிரிவு தலைமையகத்தில் பிரத்யோக சைபர் ரோந்து மற்றும் புலனாய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது.

இந்த குழு 1,212 பேரை (200 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1,012 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்) முற்றிலும் பாதிக்கப்படுவதில் இருந்து முன்கூட்டியே மீட்டு, போலி முதலீட்டு செயலிகளை ஊக்குவிக்கும் சுமார் 1,507 சமூக ஊடக கணக்குகள்/பக்கங்களை முடக்கியுள்ளது. மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இணையவழி குற்றப் பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

தடுப்பு கண்காணிப்பைத் தவிர, சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழி விழிப்புணர்வாகும். "வருமுன் காப்பதே நலம்" என்ற பழமொழி சொல்வது போல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தமிழ் நாட்டின் இணையவழி குற்றப் பிரிவு உன்னதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்துத் துறைகளில் இருந்தும் 5000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட '1930 வாக்கத்தான்' என்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டமாக கூடியதற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது, சமீபத்திய 30 வகையான சைபர் குற்றங்கள் பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில கார்ட்டூன் புத்தகத் தொடர்கள், தமிழில் "சைபர் குற்றங்களும் தம்பியின் வழிகாட்டலும்" என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் " Thambi’s wisdom on Prevention of Cyber Crimes" என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவு 1,530 பள்ளிகளிலும், 1,368 கல்லூரிகளிலும் மற்றும் 4,537 பொது இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'டிஜிட்டல் கைது' மோசடி குறித்த விழிப்புணர்வை சினிமா பிரபலத்தை நடிக்க செய்து திரையிடப்பட்டது. மேற்கூறியவை தவிர, ஒவ்வொரு பிரபலமான மோசடி குறித்த குறுகிய வீடியோக்கள், பொது நெரிசலான இடங்களில் சைபர் தெருக்கள், எஃப்எம் வானொலியில் ஜிங்கிள்கள், Bulk SMS போன்றவை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

ஆட்டோ ரிக்சாக்கள் அனைத்து பொதுமக்களையும் இணைப்பதால், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 15,000 ஆட்டோ ஓட்டுநர்களை இணைத்து 'சைபர் குற்றப்பிரிவின் விழிப்புணர்வு தூதுவர்கள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் இணையவழிகுற்றப் பிரிவு பின்வினை நடவடிக்கைகளான கைது செய்தல், குண்டர் சட்டத்தின் கீழ் காவல் வைத்தல் போன்றவற்றை சமமாக செய்கிறது. தமிழ்நாட்டில் சைபர்குற்றங்களுக்கு எதிரான ஒரு துரிதமான நடவடிக்கையில் தமிழ்நாட்டின் இணைய வழி குற்றப்பிரிவு 2024 டிசம்பர் மற்றும் 2025 ஜூன்-ல் "ஆபரேஷன் திரைநீக்கு" மூலம் மாநிலம் முழுவதும் 193.97 கோடி இழப்பு மற்றும் 654 NCRP வழக்குளோடு தொடர்புடைய 212 சைபர் குற்றவாளிகளை வெற்றிகரமாக கைது செய்தது.

ஒரு பான் இந்தியா நடவடிக்கையாக-"ஆபரேஷன் ஹைட்ரா" உத்தரகண்ட், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து 7 சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளது. தமிழ்நாடு இணைய வழி குற்றப்பிரிவு “Operation Blue Triangle” மூலம் சைபர் அடிமைத்தனத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச மனித கடத்தல் முகவர்கள், போலி வங்கி கணக்கு முகவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதில் இதுவரை 11 முதல் தகவல் அறிக்கைகள் மூலம் 10 சைபர் குற்றவாளிகளைக் கைது செய்தும் 4 சைபர் குற்றவாளிகளைக் குண்டர் தடுப்பு காவலில் அடைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில், இணைய வழிகுற்றப் பிரிவு 1,193 சைபர் குற்றவாளிகளை பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான நடவடிக்கைகளால் கைது செய்துள்ளது.

சர்வதேச தொலைத் தொடர்பு நுழைவாயில்களில் மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மோசடி அழைப்புகள் இப்போது ஆரம்ப இடத்திலேயே திறம்பட தடுக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் SIM box-களை செயல்படுத்துவதன் மூலம் தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, இணைய வழிகுற்றப் பிரிவு உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக 44 SIM box- கள் கைபற்றப்பட்டு, நாடு முழுவதும் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில்3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் மொத்தம் 50 சைபர் குற்றவாளிகளை காவலில் அடைத்து சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு இணைய வழிகுற்றப் பிரிவு அதன் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளுடன், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் சட்ட அமலாக்க முகமைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை அடையாளம் காண தொடர்ந்து முயற்சிக்கிறது.

இந்த நோக்கத்துடன், "TOR-Unveil: Peel the Onion" என்ற சிக்கல் அறிக்கையை நிவர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2025 வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் ஆதரவின் கீழ் இயங்கும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சங்கம், இந்த ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்று ரூ. 3 லட்சம் பரிசைவென்றுள்ளது.

இணையவழி குற்றபிரிவு, மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புகளை வழங்குகிறது. 2025 ஆம் ஆண்டில், இணையவழி குற்றபிரிவின் பல்வேறு பிரிவுகளில் 156 மாணவர்களுக்கு 3 பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story