சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது: அண்ணாமலை கண்டனம்

கோவில், இரவு நேரக் காவலாளிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை ,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .






