'மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உயர்ந்துள்ளது' - தமிழக அரசு தகவல்

இந்தியாவின் மொத்த எண்ணெய் அல்லாத பொருட்கள் ஏற்றுமதியில் 15 சதவீத பங்கை தமிழ்நாடு வகிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"2014-ம் ஆண்டு 'மேக் இன் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-ம் ஆண்டுக்குள் உற்பத்தி துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. தற்போது வரை 16 சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவிலே அதிக எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தம் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதன்மூலம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு, 25 சதவீதத்தை உற்பத்தி துறையில் இருந்து பெற்று நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது. ஆடைகள், வாகன உற்பத்தி, பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும், எண்ணெய் அல்லாத பொருட்களில் ஏற்றுமதியில் 15 சதவீத பங்கை தமிழ்நாடு வகிக்கிறது. இந்தியாவின் 41 சதவீத மின்னணு சாதனப் பொருட்கள், 38 சதவீத காலணிகள் மற்றும் 45 சதவீத வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டின் உற்பத்தி துறையின் சிறப்பான வளர்ச்சியினால் இந்தியாவில் 9.69 சதவீதம் மாநில உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது. பல மாநிலங்களில் ஒற்றை சாளர அனுமதி, முதலீட்டாளர் மாநாடு என்பவை வெறும் பிரசாரமாக இருந்தாலும், தமிழ்நாடு நடைமுறையில் இதை செயல்படுத்துகிறது.
தொழில்நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள 'கைடன்ஸ் தமிழ்நாடு' நிறுவனம், தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு நிலம், அனுமதி, தொழிலாளர் பிரச்சினை மற்றும் அன்றாட செயல்பாட்டு சிக்கல்களுக்கு உதவுகிறது. இந்த விரைவான மற்றும் திறமையான அணுகுமுறை, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசும், அரசுப் பணியாளர்களும் துணையாக இருந்து விரைவான தீர்வுகளை வழங்குகின்றனர். மத்திய அரசு மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தபோது, தமிழ்நாடு ஒரு வாரத்திற்குள் இதனை செயல்படுத்தி மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தது.
தமிழ்நாடு 2030-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடே இந்தியாவில் உற்பத்திதுறையில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்கள் தங்களுக்கிடையேயான போட்டியில், தமிழ்நாட்டின் வெற்றிப் பாடங்களைப் பின்பற்றினால், இந்தியா விரைவில் உற்பத்தித் துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






