காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரர் சக்திவேல் வீர மரணம்: அன்புமணி வீர வணக்கம்

உயிர்த்தியாகம் செய்துள்ள ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காஷ்மீர் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சத்துரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய்நாட்டைக் காக்கும் பணியில் பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் சக்தி வேல் அவர்களுக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன்.
உயிர்த்தியாகம் செய்துள்ள வீரரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






