டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற செய்தி பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது. இந்த கார் வெடிப்பின் மூல காரணம், பின்னணியில் உள்ளவர்கள், இது பயங்கரவாத தாக்குதலா? எனும் கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்தியாவின் தலைநகரில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் உடனடியாக ஆராயப்பட்டு களையப்படவேண்டியவை. அதேநேரத்தில் அப்பாவி மக்களை கொல்வதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களின் செயல் அயோக்கியத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது, கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






