தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழக வெற்றி கழகம் கோரிக்கை


தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழக வெற்றி கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2025 1:08 PM IST (Updated: 10 Aug 2025 4:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது.

தூத்துக்குடி

தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாநகர நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது. முள்ளக்காடு பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கர் இடம் கையகப்படுத்த அரசுத்துறையினா் முயற்சி செய்து வருகின்றனா்.

இதில் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் மிகவும் நடுத்தர மற்றும் ஏழை தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு அரசு வழங்கிய குறைந்த அளவு இடம் வைத்துள்ள ஏழை மக்களின் இடமும் இதில் சேர்ந்து பறிபோகிறது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை உள்ளது. உப்பளத்தை அழிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

உலக அளவில் உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியில் தற்போது உப்புத்தொழில் அழிந்து போகும் வகையில் கப்பல் கட்டும்தளம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் பின்புலத்தில் முதல்-அமைச்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முள்ளக்காடு பகுதியில் மட்டும் 500 ஏக்கர் என்றால் கடற்கரை பகுதி முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை எத்தனை ஆயிரம் ஏக்கர் இருக்கும் என்று சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு இடம் உள்ளது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நிலத்தை கையகப்படுத்துவதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழக வெற்றி கழக நிறுவன தலைவரும் நடிகருமான விஜய் உத்தரவின் பேரில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story