குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்; இணையதளம் தொடங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய இணையதளம் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், "இன்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.






