தஞ்சை: பொங்கல் நீச்சல் போட்டியில் குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

உரிய பாதுகாப்புகள் இன்றி நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஆனைக்காடு பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கூலித் தொழிலாளி மணிகண்டன் என்பவர் கலந்து கொண்டார்.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் வேகமாக நீச்சலடித்து மறுகரைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், மணிகண்டன் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
ஆனால் இதனை அறியாது மறுபுறம் கரையில் நின்று கொண்டிருந்த அவரது குழந்தைகள், தங்கள் தந்தையை உற்சாகப்படுத்துவதற்காக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதன் பின்னர் மணிகண்டனை சக போட்டியாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து, அவரது குடும்பத்தினர் கதறி அழுததைக் கண்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது. உரிய பாதுகாப்புகள் இன்றி நீச்சல் போட்டி நடத்தப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






