சென்னை உலா பேருந்தின் நேர அட்டவணை வெளியானது

பாரம்பரியமிக்க இடங்களை பார்க்கும் வகையிலான ‘சென்னை உலா’ பேருந்து சேவை நேற்று தொடங்கியது.
சென்னை,
சென்னை நகரத்தை சுற்றிபார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ‘சென்னை உலா' பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 14-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் பயன்படுத்திய பாரம்பரியமிக்க பேருந்துகளை போன்று 5 பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு சென்னை உலா பேருந்துகளாக நேற்று முதல் சேவையை தொடங்கின.
இந்த பேருந்துகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம், தலைமைச் செயலகம், சென்னை ஐகோர்ட்டு, பல்லவன் இல்லம் வழியாக மீண்டும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த பேருந்தில் ரூ.50 டிக்கெட் எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் மேலே உள்ள எந்த இடத்திலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏறி மற்றொரு இடத்தில் இறங்குவதாக மட்டும் இருந்தால் அதற்காக டீலக்ஸ் பஸ் கட்டண அடிப்படையில் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். ½ மணி நேர இடைவெளியில் இந்த பேருந்துகள் இயக்கப்படும். நேற்று தொடங்கிய இந்த பேருந்துகளில் மக்கள் உற்சாகமாக பயணித்தனர். இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
சேவை நேரம்:-
• வார நாட்கள் (திங்கள் - வெள்ளி): மாலை 04:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
• வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்: காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து உலா பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பெருநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;-
சென்னை உலா பேருந்தின் நேர அட்டவணை.. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து......!
குறிப்பு: இந்த சென்னை உலா பேருந்தில் பயணம் செய்ய விரும்புவோர், இந்த பேருந்து வழித்தடத்தில் உள்ள எந்த பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.
பயண கட்டணம்: ரூ. 50 மட்டுமே! (ஒரு நாள் முழுவதும் செல்லத்தக்கது). இந்த ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி ஐந்து பேருந்துகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







