இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும்: மாநில செயலாளர் வீரபாண்டியன்

கிராமப்புறத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முன்மொழிந்தது இடதுசாரிகள் தான் என்று வீரபாண்டியன் கூறினார்.
கோவில்பட்டி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெல்லும். தமிழக மக்கள் எப்போதும் பிரிவினை கருத்துக்களை ஏற்க மாட்டார்கள். அவரவர் ஆலயங்கள், கடவுள்கள், வழிபாடு என ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பிளவு அரசியலை செய்கின்றனர். அதற்கு திருப்பரங்குன்றம் ஒரு சான்று. இதை தமிழ் மண் ஏற்காது.
நடிகர் விஜய் அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்களும், பெறவேண்டிய அனுபவங்களும் நிறைய இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதை முதல்-அமைச்சரிடம் கேட்டாலும் சூழ்நிலையை பொறுத்து பரிசீலனை செய்வார்.
கிராமப்புறத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முன்மொழிந்தது இடதுசாரிகள் தான். கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கின்ற திட்டம். இன்றைக்கு மத்திய அரசு அதிலிருந்து விலகி மாநிலங்கள் மீது சுமையை கூட்டுகிறது. அந்த திட்டத்தில் இருக்கும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது. நிதி பொறுப்பையும் மத்திய அரசு கூடுதலாக ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






