வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் உறவினருடன் மனைவி உல்லாசம்...மதுரையை பரபரப்பாக்கிய கள்ளக்காதல்

வீட்டில் தேவா இல்லாத நேரம்பார்த்து அடிக்கடி வினோத்குமார் வந்து இந்திராணியை தனிமையில் சந்தித்துள்ளார்.
மதுரை,
மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.
கடந்த 26-ந்தேதி தேவா திடீரென மாயமானதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது தாயார் சுசீலா, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேவாவின் மனைவி இந்திராணி நேற்று கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து கணவரை நான் தான், உறவினா் உள்ளிட்டோருடன் சேர்ந்து கொன்றதாக தெரிவித்து சரணடைந்தார். இதையடுத்து இந்திராணியை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது இந்திராணிக்கும், அவரது சித்தப்பாவான கரூரில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த வினோத்குமார்(41) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. வீட்டில் தேவா இல்லாத நேரம்பார்த்து அடிக்கடி வினோத்குமார் வந்து இந்திராணியை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை அறிந்த தேவா, 2 பேரையும் கண்டித்துள்ளார்.
இந்தநிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி கணவர் தேவாவை இந்திராணி மற்றும் வினோத்குமார் ஆகியோர் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் தேவா இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திராணி, வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
அதன்படி அவரும், சிலருடன் வீட்டிற்கு வந்தார். இந்திராணி, வினோத்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் தேவாவிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் தேவாவை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
பின்னர் நள்ளிரவில் கரூரில் இருந்து தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் தேவா உடலை கரூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு எடுத்து சென்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக நம்பவைக்கும் வகையில் உடலை போட்டுவிட்டு சென்றனர். இதையடுத்து இந்திராணி மதுரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மறுநாள் காலை ெரயில்வே போலீசார் தண்டவாளத்தில் தேவாவின் உடலை கைப்பற்றி ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கருதி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தேவாவை காணவில்லை என்ற புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் தாமரைக்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்து சென்றதை கண்டறிந்தனர். ஆம்புலன்ஸ் குறித்து அந்த பகுதியில் விசாரணை செய்வதை கேள்விபட்ட இந்திராணி, கொலையை கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விடுவார்கள், அதற்கு முன்பு நாமே சரணடைந்து விடலாம் என நினைத்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இந்திராணியை, கொலை நடந்த தாமரைக்குளத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்திராணி, கணவரை கொன்றது குறித்து நடித்து காண்பித்தார். தலைமறைவான வினோத்குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






