இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சிய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது - எச்.ராஜா

நாச்சியார்கோவில் திருக்குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பது தொடர்ந்து நடந்து வருவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கும்பகோணம் நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுள வள்ளி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில் கருடசேவை உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் முக்கோடி தொப்போற்சவ விழா நீண்ட காலத்திற்குப் பிறகு நாளை 31.12.2025 புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.
இக்கோவிலின் தெப்பக்குளத்தில் நீர் பாய்ச்சக்கால் மற்றும் நீர் வெளியேறும் வடிகால் ஆகியவை நீண்ட காலமாக சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் குளத்தை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் உணவகங்களின் கழிவு நீர் சட்டவிரோதமாக குளத்தில் கலப்பது தொடர்ந்து நடந்து வந்ததால் குளத்தில் கழிவுநீர் கலந்து குளம் அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசத்தொடங்கி அதன் காரணமாக நீண்ட காலம் தெப்போற்சவம் நடைபெறாமல் இருந்தது.
ஆன்மிக அன்பர்களால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைத்து நீர்வழிப்பாதைகளை சரியாக பராமரிக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெயரளவிற்கு தூர்வாரும் பணிகளை செய்துவிட்டு சாக்கடை கழிவுநீர் கலப்பதை முற்றிலுமாக தடுக்க நடைவடிக்கை மேற்கொள்ளாததன் காரணமாக மீண்டும் திருக்குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் அசுத்தம் நிறைந்த தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடத்துவதை பக்தர்கள் ஆட்சேபிக்கின்றனர். கடந்த 26.12.2025 அன்று நான் நேரடியாக நாச்சியார்கோவிலுக்குச் சென்று ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு திருக்குளத்தை சுற்றி வந்து பார்வையிட்ட போது திருக்குளம் அசுத்தம் நிறைந்து காணப்பட்டதை நேரில் காண முடிந்தது. அச்சமயம் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு கோவில் தெப்போற்சவத்திற்கு முன்னதாக திருக்குளத்தை முழுமையாக தூய்மை செய்துவிட்டு அதன் பிறகு விழாவை நடத்தவேண்டும் என்கிற பக்தர்களின் கோரிக்கையையும், விருப்பத்தையும் முன்வைத்தேன். ஆனால் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
திருக்குளத்தை தூய்மைபடுத்தாமல் நாளைய தினம் தெப்போற்சவம் நடத்த இருக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சிய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விநாசகாலே விபரீத புத்தி என்பது போலத்தான் இருக்கிறது இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு.
இறைவனுக்கு எதிராக செய்யும் பாவமும், பக்தர்களின் சாபமும் இந்து விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாடம் தரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






