“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..” - மதுரை ஐகோர்ட்டில் வக்பு வாரியம் தரப்பு வாதம்

மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுவதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது, வக்பு வாரியம் தரப்பில் வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. கோவில் வழக்கத்தை மாற்றி மலை உச்சியில் தீபமேற்றப்படாத இடத்தில் தீபமேற்ற மனுதாரர் கோருகிறார். மனுதாரர் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம்? நிலம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்னை எழுந்துள்ளது
மனுதாரர் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம்? நிலம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்னை எழுந்துள்ளது. தீபத்தூண் என சொல்லப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தம். இதையெல்லாம் தனி நீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான் என்றும் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.
மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. குதிரைச்சுனை அருகே பாதைகள் பிரிகின்றன. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு சொந்தமானது.
மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனையையொட்டி தூண் உள்ளது. நெல்லித்தோப்பு, பாதைகள், படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு உரிமையியல் கோர்ட்டு வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை முழுவதும் உரிமையியல் கோர்ட்டு மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.






