‘ஆட்சியாளர்கள் தங்கள் வாக்காளர்களை தேர்வு செய்வதுதான் எஸ்.ஐ.ஆர். பணி’ - சீமான் விமர்சனம்


‘ஆட்சியாளர்கள் தங்கள் வாக்காளர்களை தேர்வு செய்வதுதான் எஸ்.ஐ.ஆர். பணி’ - சீமான் விமர்சனம்
x

பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் மீண்டும் முறையீடு செய்து வாக்கை பெறுவதற்கு அவகாசம் இருக்கிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சீமான் கூறியதாவது;-

“போலி வாக்காளர்களை நீக்குவதற்காக எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறார்கள். போலி வாக்காளர்களுக்கு உரிமை கொடுத்தது யார்? இத்தனை காலமாக போலி வாக்காளர்களை நீக்காதது ஏன்? தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு நெருங்கி வரும் சூழலில், இந்த குறுகிய காலத்திற்குள் தமிழகம் முழுவதும் எப்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்?

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? கள்ள ஓட்டு போடுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் தடுக்காதவர்கள், வாக்காளர் பட்டியலை மட்டும் சரியாக எண்ணி சொல்லிவிடுவார்கள் என்று நாம் நம்ப வேண்டுமா? இரட்டை வாக்குகள் உள்ளவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை கண்டறிந்து அதை மட்டும் நீக்குவதற்கு பதிலாக, ஒட்டுமொத்தமாக அனைவரும் வாக்குரிமையை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேலை?

ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் மக்களுக்கு இருக்கும் மதிப்புமிக்க உரிமை. அதை இப்படி தான்தோன்றித்தனமாக கையாள்கிறார்கள் என்றால், மக்களை எந்த அளவிற்கு இவர்கள் மதிக்கிறார்கள் என்று பாருங்கள். வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஓராண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு முறையாக செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், நீங்கள் வெளியிடப் போகும் பட்டியலில் எனது பெயர் இல்லாவிட்டால் மீண்டும் முறையீடு செய்து எனது வாக்கை பெறுவதற்கு அவகாசம் இருக்கிறதா?

இந்த நாட்டில் இதுவரை வாக்குரிமை பெற்ற வாக்காளர் பெருமக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தார்கள். ஆனால் இப்பொழுது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்வதுதான் இந்த எஸ்.ஐ.ஆர். பணி. தனக்கு யார் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்கிறார்கள். எஸ்.ஐ.ஆர். பணிகளால் குறைந்தது ஒரு கோடி பேர் தங்கள் வாக்குரிமையை இழப்பார்கள்.”

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

1 More update

Next Story