தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி

கோப்புப்படம்
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பீகார் மாநிலத்தில் பெரும் குழப்பம் மற்றும் குளறுபடிகளுடன் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தமிழகத்திலும் இன்னும் ஒருவார காலத்தில் துவங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் முன்னோடிப் பரிசோதனையின்போது, பெருமளவிலான உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் பலர் தங்கள் வாக்குரிமையை இழந்தனர். இது வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம், ஆளும் அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவதாகவும், அதன் நடவடிக்கைகள் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஜனநாயக சக்திகள் குற்றம்சாட்டுகின்றன.
குறிப்பாக, தலித், முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரங்களோடு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை எதற்கும் தேர்தல் ஆணையம் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. மட்டுமின்றி இந்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது தான், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை சந்தேகங்கொள்ளச் செய்கிறது.
தமிழகத்திலும் இந்த அவசரமான திட்டம் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது, வாக்குரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உட்படுத்தும். இந்த ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் பணியை, உண்மையான பிரதிநிதித்துவத்தையும் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இருப்பதால் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






