கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 31 March 2025 8:33 AM IST (Updated: 31 March 2025 11:40 AM IST)
t-max-icont-min-icon

கம்பராமாயணத்தை தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கருதுகிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

தென்னிந்திய பண்பாட்டு மையத்தின் சார்பில் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பராமாயண விழா நடந்து வருகிறது. நேற்று நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

நான் பள்ளியில் படிக்கும்போது கம்பர் பிறந்த ஊருக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை 2-வது முறையாக தற்போது நிறைவேறி உள்ளது.

கம்பரின் பங்களிப்பு என்பது ஏதோ ஒரு ராமாயணத்தை எழுதினார், இலக்கியத்தை படைத்தார் என்பது மட்டுமல்ல. ராமாயணத்தின் மூலம் பாரத தேசத்தில் வாழும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அவரது பங்களிப்பு உள்ளது. நமது கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு கம்பர் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. நமது கலாசாரம், பாரம்பரியத்தின் தந்தை கம்பர்.

கம்பராமாயணத்தை தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கருதுகிறேன். துரதிர்ஷ்டவசமாக நம் கலாசாரத்தை நாம் மறந்து விடுகிறோமோ? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை எப்போதும் போற்றி பாதுகாக்க வேண்டும். வாழ்வியல் தர்மங்களாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், தென்னிந்திய பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story