திருநங்கையை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி... அடுத்து நடந்த விபரீதம்

தொழிலாளியின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சிலை அருகே ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார், அப்போது அங்கு ரோந்து பணிக்கு சென்ற ஊர்க்காவல் படைவீரர் சீனிவாசன் உயிருக்கு போராடியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, குடிப்பதற்கும் தண்ணீர் கொடுத்து, நீங்கள் யார்? உங்கள் உடலில் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டது? என்று விசாரித்தார்.
அதற்கு அவர், தனது பெயர் வெங்கடேசன் (வயது 43) என்றும் திருநங்கை ஒருவரும் அவருடன் வந்த வாலிபர் ஒருவரும் சேர்ந்து தன்னை கட்டையால் அடித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர் என்றும் கூறினார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவருடைய உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பியதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது திருநங்கை மற்றும் அவரது நண்பர் ராயப்பேட்டையை சேர்ந்த ராகேஷ் குமார் (23) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
திருநங்கையிடம் வெங்கடேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உல்லாசத்துக்கு அழைத்தும் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் வெங்கடேசனை கட்டையால் தாக்கிவிட்டு திருநங்கையும் அவரது நண்பர் ராகேஷ் குமாரும் தப்பிச்சென்றது தெரியவந்தது. ராகேஷ் குமார் ஆட்டோ டிரைவராக உள்ளார். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் சூளை திடீர் நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






