சென்னை விமான நிலையத்தில் “சுத்தம், சுகாதாரம் இல்லை; துர்நாற்றம் வீசுகிறது”- ப.சிதம்பரம்

சர்வதேச விமான நிலையம், இந்த நிலையில் இருக்கலாமா? என்று ப. சிதம்பரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், நேற்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தார். 2-வது உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியில் வந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், “சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 4-ல் சுகாதார சீர்கேடுகளுடன், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது. ஒரு சர்வதேச விமான நிலையம், இந்த நிலையில் இருக்கலாமா? இது சென்னை விமான நிலைய மேலாளர்கள், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கவனத்துக்கு வரவில்லையா? துர்நாற்றத்தை எப்படி சகித்துக்கொண்டு, அங்கு இருக்கின்றனர்?” என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவுக்கு சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள், பதில் அளித்து உள்ளனர். அதில், “உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்துக்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் உள்ள குப்பைகளை, பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரம் பார்த்து, சுத்தப்படுத்தி எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
குப்பைகளை ஏற்றிக் கொண்டு குப்பை வண்டி சென்ற அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் அந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தை ஊழியர்கள் சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். பணியில் இருக்கும் விமான நிலைய மேலாளர்கள் விமான நிலையத்தின் சுத்தம், சுகாதாரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்” என்று கூறி உள்ளனர்.






