திருப்பரங்குன்றம் விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு இன்று விசாரணை


திருப்பரங்குன்றம் விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு இன்று விசாரணை
x

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட்டு மாண்பை குறைக்கும் வகையில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

மதுரை,

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வக்கீல்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும்படி அவசரப்படுத்த வேண்டாம். இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது என்றனர். இதற்கிடையே கேவியட் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து சமூக வலைதளங்களில் தேவையின்றி விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன என தெரிவித்தனர்.

இதை கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஐகோர்ட்டின் மாண்புக்கு குந்தகம் ஏற்படாத வகையில் பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, இந்த வழக்கு விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்றைக்கு) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. மேலும் தலைமைச் செயலாளரை ஆஜராக பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

1 More update

Next Story