திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீடு வழக்கு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணை


திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீடு வழக்கு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2025 7:59 AM IST (Updated: 16 Dec 2025 8:01 AM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 12-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, “நீதிபதி தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த தூணானது தீபத்தூண் அல்ல, எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதாடினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்றும்படி தனிநபர் கோருவது ஏற்புடையதல்ல. இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு.

தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. 100 ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது. கோவில் நிர்வாகத்தில் ஐகோர்ட்டு நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் கோர்ட்டில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும், நடைமுறைகளையும் நிறைவேற்றும்போது பல தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டியது அவசியம். இதனை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின்போது கருத்தில் கொள்ளவில்லை” என்று அவர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, கோவில் அறங்காவலர்கள் குழுவினர் செயல்பாட்டில் உள்ளனர். ஆனால் அவர்கள் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றனர்.

பின்னர் மூத்த வக்கீல் ஜோதி கூறுகையில், “கடந்த 3-ம் நூற்றாண்டில் மத்திய பிரதேசம் உஜ்ஜையினி பகுதியில் இருந்து சமணர்கள் தென்னிந்திய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்து வசிக்க தொடங்கினர். குறிப்பாக மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பசுமலை, கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், அரிட்டாப்பட்டி, யானைமலை ஆகிய குன்றுகளின் மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சமணர்கள் வசித்து உள்ளனர். இரவு நேரங்களில் சமணர்கள் குன்றுகளின் உச்சியில் அமர்ந்து ஆலோசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களின் வசதிக்காக கல் தூண் அமைத்து அதில் விளக்கு ஏற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். எனவே திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என தற்போது கூறப்படும் அந்த தூண், சமணர்கள் எழுப்பிய தூண்தான். இதற்கு ஆதாரமாக, கர்நாடகாவில் சரவணபெல்லா பகுதியில் இருக்கும் குன்றின் மீது உள்ள தூணும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் உள்ளிட்டவை ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அது நில அளவை கல்லும் அல்ல. தீபத்தூணும் அல்ல.

தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறையின் புத்தகத்தில், திருப்பரங்குன்றம் மலையில் பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். அது நாயக்கர் கால தீபத்தூண். அந்த தீபத்தூணில் அனுமன் உருவம் உள்ளது. அது ஆண்டவன் தலைமீது உள்ள தூண் என மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த தூண்தான் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூண். இதைத்தவிர மலையில் உள்ள தூண்கள் தீபத்தூண் அல்ல.

மதுரையை சுற்றியுள்ள குன்றுகளிலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது போன்ற தூண்கள் உள்ளன. இவை சமணர் காலத்தை சேர்ந்தவை. இதற்கான கல்வெட்டுகள், படுகைகள், எழுத்துகள், சிற்பங்கள் உள்ளன” என்று அவர் கூறினார்.

அப்போது நீதிபதிகள், சமணர்கள் பழமையானவர்கள். அவர்கள் விளக்கு ஏற்றத்தானே அந்தத் தூண்களை பயன்படுத்தி உள்ளார்கள். சில புத்தகங்களில் அது விளக்கேற்றும் தூண் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.

அதற்கு வக்கீல் ஜோதி, அந்த தூண்கள் சமணர்கள் காலத்தை சேர்ந்தவை. இந்துகளுக்கும், அந்த தூண்களுக்கும் சம்பந்தம் இல்லை. அந்த தூண்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவும் இல்லை. வைணவத்தில் வடகலை, தென்கலை பிரச்சினை உள்ளது. அதுபோல திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சரி. அதற்காக தூண் இருக்கும் இடமெல்லாம் தீபம் ஏற்ற வேண்டுமென்றால் எப்படி? ஐகோர்ட்டுக்கு வெளியேயும் ஒரு தூண் உள்ளது. அதேபோல முருகனுக்கு 2 மனைவிகள் இருக்கலாம். ஆனால் கார்த்திகை தீபத்தன்று 2 இடங்களில் தீபம் ஏற்றச்சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் வாதிட்டார்.

இதையடுத்து இடையீட்டு மனுதாரர் கனகவேல் பாண்டியன் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறை வசம் இருக்கிறது என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பாக தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெறுவது அவசியம். ஆனால் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தொல்லியல் துறையிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை என்றார்.

இதே போல மேலும் சில இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தங்களது வாதத்தை நீதிபதிகள் முன்பாக வைத்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட கலெக்டர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

நேற்றைய விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இன்று வக்பு வாரியம், மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் ராம ரவிக்குமார் ஆகியோர் தரப்பு வாதங்கள் கேட்கப்பட உள்ளது.

1 More update

Next Story