திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.32 கோடி

திருத்தணி முருகன் கோவிலில் 27 நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 32 லட்சத்து 33,116 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருத்தணியில் முருகப்பெருமானின் 5-ம் படைவீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இதில் 27 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 75,173 மற்றும், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 57,943 என மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 116 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 713 கிராம், வெள்ளி 8 கிலோ 459 கிராம் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






