தெருநாய் தொல்லைக்கு இது தீர்வு அல்ல!


தெருநாய் தொல்லைக்கு இது தீர்வு அல்ல!
x
தினத்தந்தி 6 Nov 2025 6:20 AM IST (Updated: 6 Nov 2025 9:19 AM IST)
t-max-icont-min-icon

தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ந்தேதி (நாளை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது. தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் தெருநாய்கள் சாலைகளில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கும் செய்திகள் அடிக்கடி வருகிறது. கடந்த வாரம் மணப்பாறையில் ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 7 பேரை தெருநாய் விரட்டி விரட்டி கடித்த செய்தி தினத்தந்தியில் பிரசுரமானது.

இதுபோல அன்றாடம் பல சம்பவங்கள் தெருநாய்களால் நடந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் தாயுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுவனை, தெருநாய் குறிவைத்து பாய்ந்து பாய்ந்து கடித்தது. சமீபகாலமாக நடைபயிற்சி செல்பவர்கள் கையில் ஒரு சிறு கம்பு வைத்துக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இது ஸ்டைலுக்காக அல்ல, தெருநாய்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு தான்.

டெல்லியில் தெருநாய்கள் குழந்தைகளை கடித்த செய்தி பத்திரிகையில் வந்தபோது, இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநில தலைமை செயலாளர்கள் தவிர மற்ற மாநில தலைமை செயலாளர்கள் அனைவரையும் கடந்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் ஆஜராகினர். அப்போது, தெருநாய்களுக்கு உணவளிக்க ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் தனியாக ஒரு இடம் ஒதுக்கவில்லை என்பதற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாமல் அரசு அலுவலக வளாகங்களிலும், பொதுத்துறை நிறுவன அலுவலக வளாகங்களிலும் ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மக்கள் தினந்தோறும் அவதிப்படும் தெருநாய் பிரச்சினைக்கு இதுமட்டும் தீர்வு அல்ல. தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ந்தேதி (நாளை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வார்டிலும் தெருநாய்களுக்கு உணவளிக்க இடம் ஒதுக்கும்போது, அங்கு உணவை சாப்பிடும் தெருநாய்கள் மீண்டும் சாலையிலும், வாகனங்களிலும் செல்பவர்களை விரட்டாது, கடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் இடங்களிலும், ஆள் நடமாட்டம் இருக்கும் தெருக்களிலும் ஏராளமானோர் தெருநாய்களுக்கு உணவளிப்பதால் அவர்களை எதிர்பார்த்து அந்த இடங்களிலேயே தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அங்கேயே அசுத்தம் செய்வதால் தூய்மையும் கெடுகிறது.

தெருக்களில் உணவளிக்கும்போது ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றன. அப்போது சாலைகளில் வருவோர், போவோரை தெருநாய்கள் விரட்டி சென்று கடிப்பதும் ஆங்காங்கே அன்றாடம் நடக்கிறது. எனவே, தெருநாய்கள் மீது அன்பு கொண்ட ஆர்வலர்கள் அவற்றுக்கு உணவளிப்பது மற்ற பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

அதேவேளையில், நாளை சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவும் மற்றும் இதற்கு பின்பு பிறப்பிக்கப்படும் இறுதி உத்தரவும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் இன்னல்களை கருத்தில்கொண்டு தெருநாய் தொல்லையை நிச்சயமாக கட்டுப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

1 More update

Next Story