இதுதான் எங்கள் அரசியல் மாண்பு; எதிர்காலத்தில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

பல்துறை வித்தகர் அண்ணன் சிவக்குமார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை,
சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உங்களை ‘மாணவர்கள்' என்று அழைப்பதை விட, பட்டம் பெற்ற ‘கலைஞர்கள்' என அழைப்பதே பொருத்தமானது. அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். குறிப்பாக அதிகமான பெண்கள் பட்டம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழாவில் முதலமைச்சராகவும், பல்கலைக்கழக வேந்தராகவும் மட்டுமல்லாமல், நாடகம் மற்றும் திரைத்துறையில் பணியாற்றிய ஒரு கலைஞன் என்ற முறையிலும் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
புகழ்பெற்ற நடிகர், ஓவியர், சிறந்த சொற்பொழிவாளர் என பல்துறை வித்தகரான அண்ணன் சிவக்குமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும். அவரின் ஓவியங்களை கலைஞர் மிகவும் ரசித்திருக்கிறார். திராவிட மாடல் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தம்பிகள் சூர்யா, கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்தவர் அண்ணன் சிவக்குமார்.
அம்மையார் ஜெயலலிதா பெயரை தாங்கியுள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்திற்கு, எங்கள் ஆட்சியில் எந்தத் தனிப்பாகுபாடும் காட்டப்படவில்லை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை. 2021-க்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்தை மேலும் செயல்திறனுடனும், செழுமையாகவும் வளர்த்துள்ளோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இந்த அரசியல் மாண்பு இடையே இல்லாமல் போயிருந்தாலும், எதிர்காலத்தில் இது தொடர்ந்து நிலைக்க வேண்டும்.
2021க்குப் பிறகு தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக கூடுதல் நிதியும் திராவிட மாடல் ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இன்னும் சிறப்பாக வழிநடத்தப்படும்.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் நிர்வாக செலவிற்கான மானியத்தொகை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். பறையிசைக் கலைஞர் வேலு ஆசான் கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வளையங்குளத்தில் கிராமிய கலை பயிற்சி பள்ளி அமைக்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






