டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டல்: பெண் என்ஜினீயரிடம் ரூ.32 கோடி பறிப்பு

டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் என்ஜினீயரிடம் ரூ.32 கோடியை மர்மநபர்கள் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டல்: பெண் என்ஜினீயரிடம் ரூ.32 கோடி பறிப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு இந்திராநகரில் 57 வயது பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு(2024) செப்டம்பர் 15-ந் தேதி மும்பை அந்தேரியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் அப்பெண்ணிடம் பேசினார். அப்போது உங்களது பெயரில் 3 சிம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், 4 பாஸ் போர்ட்டுகள் மற்றும் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் அடங்கிய பார்சல் வந்திருப்பதாக கூறினார்.அது தன்னுடையது இல்லை என்று கூறி அந்த பெண் மறுத்தபோதும், இது சைபர் குற்றம் என்று கூறி எதிர்முனையில் பேசிய நபர் மிரட்டினார். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி மேலும் சிலர் பேசி பெண்ணை மிரட்டினர்.

அந்த பெண் மற்றும் அவரது சொத்து குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட மர்மநபர்கள், அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறினர். சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிந்தால், உங்களது குடும்பத்தினரையும் வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என்றும் மர்மநபர்கள் அப்பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.இவ்வாறாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களாக அந்த பெண்ணை மிரட்டி ஒட்டு மொத்தமாக ரூ.31 கோடியே 83 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்தனர். அதாவது மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு 187 தவணைகளில் பணத்தை அந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் செலுத்தி இருந்தார். அந்த பணத்தை வழக்கு முடிந்த பிறகு திருப்பி தந்துவிடுவோம் என்று மர்ம நபர்கள் கூறியிருந்தனர்.

முடிவில் அந்த பெண் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று சான்றிதழ்களை மர்மநபர்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் கொடுப்பதாக கூறியிருந்த ரூ.31 கோடியே 83 லட்சத்தை திரும்ப கொடுக்கவில்லை.அப்போது தான் தன்னை மிரட்டி மர்மநபர்கள் ரூ.31.83 கோடியை பறித்திருப்பதை அந்த பெண் உணர்ந்தார். இதுபற்றி கடந்த 14-ந் தேதி கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com