திருப்பூரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 10.1 சதவீதம் சரிவு

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சந்தை விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஏ.இ.பி.சி. முக்கிய பங்கு வகித்து வருகிறது.
திருப்பூர்,
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பெற்றிருந்தது. அமெரிக்க வரி விதிப்புக்கு பிறகு ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 69 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) அளித்த தகவலின்படி, இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.65 ஆயிரத்து 989 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில், இதே காலத்தில் ரூ.63 ஆயிரத்து 801 கோடிக்கு நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
கடந்த மாதம் ரூ.8 ஆயிரத்து 43 கோடியே 55 லட்சத்துக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.9 ஆயிரத்து 436 கோடியே 7 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. அதாவது ரூ.1,393 கோடி ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டைவிட குறைந்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 10.1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை கணக்கிடும்போது 5.4 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் ஏற்றுமதியாளர்கள் தரம், மற்றும் வினியோகத்தில் குறிப்பிடத்தக்க தகவமைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அரசின் கொள்கை ஆதரவு மற்றும் தயாரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சந்தை விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஏ.இ.பி.சி. முக்கிய பங்கு வகித்து வருகிறது.
சர்வதேச சந்தை தேவை அதிகரிப்பு, மேம்பட்ட நிலைத்தன்மை முயற்சிகள், மாற்று வியாபார உடன்பாடுகளால் இந்த நிதியாண்டில் வரும் மாதங்களில் அதிக வளர்ச்சியை எட்டும் என்று ஏ.இ.பி.சி. நம்பிக்கை தெரிவித்துள்ளது.






