வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை த.மா.கா முழுமனதோடு வரவேற்கிறது - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
போலியான வாக்காளர்களை முற்றிலுமாக நீக்க இது வகை செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறிவித்துள்ளது. இதனை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) முழுமனதோடு வரவேற்கிறது.
இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் விடுபடாமலும், தகுதயற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்டாமலும் உள்ளது என்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த அறிவிப்பின்படி அக்டோபர் 27- ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்ததை இரண்டாம் கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது துவங்கியுள்ளது.
இந்த சிறப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயக முறையில் அனைவரும் வாக்களிக்கவும், தகுதியுள்ளவர்களுக்கு ஒட்டுரிமையை உறுதி செய்வதும், போலியான வாக்காளர்களை முற்றிலுமாக நீக்கவும் இது வகை செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால், நேர்மையாக வாக்களிப்பவர்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு ஊக்கத்தையும் அளித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்களர் சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) முழுமனதோடு வரவேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






