இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Oct 2025 7:45 PM IST
தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் பழனிசாமி - உதயநிதி ஸ்டாலின்
நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும் வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 23 Oct 2025 7:11 PM IST
மேட்டூர் அணை: 60,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் தற்போது வினாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் 60,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 23 Oct 2025 7:09 PM IST
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை முதல் 26ம் தேதி வரை போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Oct 2025 7:07 PM IST
சென்னையில் ரூ.6.3 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
- 23 Oct 2025 7:06 PM IST
ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழித் தீவன அறவை ஆலையில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ஆலை அதிபர் பார்த்தீபன் மீது வழக்கு பதிவு செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 23 Oct 2025 6:24 PM IST
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்- ஆணையம் ஆலோசனை
2026 ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா, மே.வ. மாநில அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னர் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செயல்படுத்துவது பற்றி அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு நவம்பர் முதல் ஒவ்வொரு கட்டமாக SIR -ஐ செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தேதிகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
- 23 Oct 2025 6:22 PM IST
நெல்கொள்முதல் தாமதம் - ஈபிஎஸ் கண்டனம்
விவசாயிகள் படும் சிரமங்களை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 23 Oct 2025 5:42 PM IST
நெல் ஈரப்பதம் - மத்திய அரசு குழு அமைப்பு
நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, இது குறித்து 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு. ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசு குழுவில் தலா 3 பேர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Oct 2025 5:35 PM IST
பாஜக பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூடிய நடிகர் கிடைத்திருக்கிறார் -கருணாஸ் தாக்கு
பாஜக கம்போஸ் செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார், விரைவில் பாடல் ரெடியாகும் என நினைக்கிறேன். பனையூர் கேட்-ன் பூட்டு வெளியே போட்டுருக்கா? உள்ளே போட்டிருக்கா? என நீங்கதான் பார்க்கணும் என செய்தியாளர்கள் சந்திப்பில், தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.
- 23 Oct 2025 5:24 PM IST
பண்டிகை முடிந்தும் பள்ளிக்கு திரும்பாத மாணவர்கள்
விடுமுறை முடிந்து 60 சதவீத மாணவர்களே பள்ளிக்கு திரும்பியுள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர், மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்னும் திருப்பூர் திரும்பாததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.















