இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 July 2025 8:02 PM IST
ஜெர்மனி நாட்டின் தெற்கு பகுதியில் ஐ.சி.இ. எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் செல்ல கூடிய அந்த ரெயில், ஸ்டிராபிங் மற்றும் பிளாட்லிங் பகுதிகளுக்கு இடையே சென்றது.
அப்போது பவாரியா என்ற பகுதியில் ரெயில் இன்று சென்றபோது, திடீரென பயணி ஒருவர் எழுந்து தன்னிடம் வைத்திருந்த கோடரியால் சுற்றியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.
- 3 July 2025 7:45 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச உள்ளது.
- 3 July 2025 7:29 PM IST
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் 4 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர தானே (1), புனே (1), புனே மாநகராட்சி பகுதி (7) மற்றும் நாக்பூர் (1) ஆகிய பகுதிகளில் பதிவாகி உள்ளன.
இதனால், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,547 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
- 3 July 2025 6:43 PM IST
பிரதமர் மோடி கானா நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர் தனி விமானத்தில் நேற்று கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கானா நாட்டுக்கான பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று மாலை புறப்பட்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 3 July 2025 6:29 PM IST
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்திய அணி 110 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 419 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 168 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- 3 July 2025 5:00 PM IST
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.