இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Sept 2025 3:44 PM IST
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் ஐடி ஊழியர் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் ஐ.டி ஊழியரை கடந்த ஜூன் மாதம் குஜராத் போலீசார் கைது செய்த நிலையில், தற்போது சென்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் கணவரை பழிவாங்க, அவர் பெயரில் இ-மெயில் ஐடி உருவாக்கி டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலமாகி உள்ளது.
- 8 Sept 2025 2:59 PM IST
தங்கம் விலை கிராம் ரூ.10,000 கடந்தது
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.280 குறைந்திருந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
- 8 Sept 2025 2:29 PM IST
சமூக வலைதளங்களுக்கு தடை - வெடித்த போராட்டம்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது, பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- 8 Sept 2025 2:27 PM IST
அதிமுக விரைவில் ஐசியூ-வில் அனுமதிக்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள். ஆனால் உங்களோட கட்சியையே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் உங்கள் இயக்கம் ஐசியூவில்தான் அனுமதிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 8 Sept 2025 2:24 PM IST
கண்ணாடி பாலம் விரிசல் - நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு
கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். கண்ணாடி பாலம் விரிசல் தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், சீரமைப்பு மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
- 8 Sept 2025 1:35 PM IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் - சுற்றுலா பயணிகள் அச்சம்
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் மட்டும் விரிசல் அடைந்துள்ளது.
- 8 Sept 2025 12:38 PM IST
கூட்டணி விவகாரம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
பாஜக கூட்டணியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகிய டிடிவி தினகரன், தான் கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இதனை நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;
"எனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் பிரச்சினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தம் தருகிறது என கூறினார்.
- 8 Sept 2025 11:47 AM IST
சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த சோதனை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- 8 Sept 2025 11:24 AM IST
ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு உயர்ந்து காணப்பட்டது.
அது, தொடக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து, 80,932 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 100-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து 24,808.40 புள்ளிகளாக இருந்தது.
இதில் மும்பை பங்கு சந்தையில், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, அதானி போர்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்துடன் தொடங்கின. எனினும், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டிரென்ட் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
- 8 Sept 2025 11:23 AM IST
காஷ்மீரில் என்கவுன்ட்டர்; பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்காம் மாவட்டத்தின் குடார் வன பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். கூட்டாக சேர்ந்து, சிறப்பு அதிரடி குழுவாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
















