இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Sept 2025 10:59 AM IST
மதிமுகவில் இருந்து நீக்கம்: அடுத்த வாரம் ஆதரவாளர்களை சந்திக்கும் மல்லை சத்யா
மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மல்லை சத்யா, ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். துரை வைகோ வருகைக்குப்பின் மதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. தனது மகன் துரை வைகோ குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
- 8 Sept 2025 10:22 AM IST
தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 8 Sept 2025 10:19 AM IST
தமிழகத்தில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு தமிழகம் திரும்பியுள்ளேன். இந்த பயணம் மாபெரும் வெற்றிபயணமாக அமைந்துள்ளது. மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
தமிழகம் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல் தமிழ்நாட்டிலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தை நோக்கி நிறைய முதலீடுகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதலீடுகளை தாண்டி நல்லுறவுக்காக ஒன்று கூடிய தருணமாக இந்த பயணம் அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
- 8 Sept 2025 10:16 AM IST
டெல்லி செல்லும் செங்கோட்டையன்? காரணம் என்ன? - அவரே அளித்த பதில்
”நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான். அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும்.
- 8 Sept 2025 9:38 AM IST
பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் கடும் வெள்ள பாதிப்பு; பிரதமர் மோடி நாளை ஆய்வு
வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாப்பில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதனை பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.
- 8 Sept 2025 9:36 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 8 Sept 2025 9:35 AM IST
ஹமாஸ் அமைப்புக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை; டிரம்ப் பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பணய கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இஸ்ரேல் அரசு என்னுடைய விதிமுறைகளை ஏற்று கொண்டது. ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்று கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. அப்படி ஏற்று கொள்ளவில்லை என்றால், விளைவுகளை பற்றி ஹமாஸ் அமைப்புக்கு நான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறேன்.
இது என்னுடைய கடைசி எச்சரிக்கை. மற்றொரு முறை எச்சரிக்கமாட்டேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.
- 8 Sept 2025 9:33 AM IST
எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் 17-ந்தேதி தொடக்கம்; அ.தி.மு.க. அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, வருகிற 17-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி, 17-ந் தேதி தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், 18-ந் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19-ந் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம், 20-ந் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21-ந் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 23-ந் தேதி குன்னூர், உதகமண்டலம், 24-ந் தேதி கூடலூர், 25-ந் தேதி வேடசந்தூர். கரூர், 26-ந் தேதி அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.
- 8 Sept 2025 9:17 AM IST
பரபரப்பாகும் அரசியல் களம்.. நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் செங்கோட்டையன்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபி கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கிறேன். அதற்குள் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும். இல்லையென்றால் என்னை போன்ற நிலையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அந்த பணியை மேற்கொள்வோம்.' என்றார்.
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வின் இந்த பேட்டி அ.தி.மு.க.விலும், தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
- 8 Sept 2025 9:02 AM IST
மதுரை, சிவகங்கை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரையில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக செஞ்சி, திருப்புவனத்தில் தலா10 சென்டி மீட்டரும், மணலியில் 9 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















